உணவு பாதுகாப்பு மசோதா நோக்கம் நிறைவேறுமா?

Category : அலசல்

ஏழைகள் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்னும் உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் உணவு பாதுகாப்பு மசோதாவை யார்தான் எதிர்க்கமுடியும் என்று நீங்கள் கேட்கலாம். நோக்கம் உயர்வானதுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த மசோதா சட்டமாகும் பட்சத்தில் அதை அரசு எப்படி நிறைவேறப்போகிறது என்பதிலும் யார் உண்மையில் இந்தச் சட்டத்தால் பயனடையப்போகிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்கும்போது, குழப்பங்களும் அச்சங்களுமே நம்மை எதிர்கொள்கின்றன.

உயிர் வாழ உணவு அவசியம். உணவு உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டவர்கள் தங்கள் தேவைக்குப் போக எஞ்சியதைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்த போது சந்தையும் வியாபாரமும் வளர்ச்சியடைந்தன. விற்பவர்கள், வாங்குபர்கள் என்னும் பிரிவினரே இதில் ஈடுபட்டுவந்தனர். பிற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக உழைக்கும் வர்க்கத்தினருக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அதையே காரணம் காட்டி அரசு உணவுத் துறையில் நுழைந்தது. இன்று ஏதாவது ஒரு வகையில் உணவு உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. முக்கியமாக, விலையைத் தீர்மானிப்பதில் அரசு கட்டற்ற அதிகாரத்துடன் செயல்படுகிறது.

உணவுப் பொருள்களின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் அரசு கட்டுப்பாடு கூடாது என்பது காந்தியின் கொள்கை. இன்றோ உணவுப் பொருள்கள் வழங்குவதைத் தனது ஓட்டு வங்கியைப் பெருக்கிக்கொள்வதற்கான ஒரு வழியாகவே அரசு கையாள்கிறது. அரசின் உணவுக் கொள்கைகளும் திட்டங்களும் இதைக் குறிவைத்தே தீட்டப்படுகின்றன. உணவு வழங்குவது அரசின் கடமை என்னும் நிலை மாறி, உணவு பெறுவது மக்களின் உரிமை என்னும் நிலைக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.

பற்றாக்குறை கொள்கைகள்

இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதற்கு 1950க்குப் பிறகான அரசின் பல்வேறு கொள்கைகள்தான் காரணம் என்பது பலரின் கருத்து. 1976 வாக்கில் நிலைமை மோசமான நிலையை எட்டியபோது இந்தியா அதிகபட்சமாக பத்து மில்லியன் டன் வரை உணவு இறக்குமதி செய்தது. உணவுப் பொருள்களில் அப்போது இந்தியாதான் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு. குறிப்பாக அமெரிக்காவின் பி.எல்480 என்ற திட்டத்தின் மூலம் அதிக அளவில் உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் சந்தையில் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது. பணவீக்கம் வானை நோக்கிப் பறந்தது.

பின்னர் பசுமைப் புரட்சிமூலம் இந்தியா தன்னிறைவு பெற்றது என்றபோதும் மூன்று வேளை உணவை அரசாங்கத்தால் இன்னமும் பலருக்கு அளிக்கமுடியவில்லை என்பதே நிஜம்.  ஒரு வேளை காந்தி கூறியது போல அரசு உணவு உற்பத்தியிலும் விநியோகத்திலும் தலையிடாமல் இருந்திருந்தால் மக்கள் அவர்களாகவே உணவுப் பிரச்னையைச் சந்தையின்மூலம் சரி செய்து இருப்பார்களோ என்னும் சந்தேகமும் உண்டாகிறது.

‘இந்தியாவில் எதுவேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால் விவசாயம் எதற்காகவும் காத்திருக்க முடியாது’ என்று வலியுறுத்தினார் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. ஆனால் இந்தியா சுதந்தரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்பும் உணவுப் பிரச்னை தீரவில்லை.

பொது விநியோக முறை

ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகிக்க இப்போது செயல்பட்டுவரும் பொது வினியோக முறையான அரசு நியாய விலைக் கடைகளில் கட்டுக்கடங்காத அளவுக்கு ஊழல்கள் பெருகியுள்ளன. மத்திய அரசின் ஃபுட் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா (எஃப்.சி.ஐ) 1964ல் நிறுவப்பட்டது. போதுமான உணவுப் பொருள்களைக் கிடங்குகளில் சேமித்து அவசிய காலத்தில் உதவுவதே இதன் நோக்கம். ஆனால் இந்த அமைப்போ நிர்வாகரீதியில் ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கிக்கிடக்கிறது. உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்த மத்திய அரசு அதை சேமித்து வைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எஃப்.சி.ஐ அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தால் நிச்சயம் அது பிற்காலத்தில் ஊழலில் மூழ்கிப்போகும் என்று  இந்திய சந்தைப் பொருளியல் அறிஞரான பேராசிரியர் பி.ஆர். ஷெனாய் (1905 & 1978) முன்பே எச்சரித்தார். மத்திய அரசு முழுமையான அதிகாரத்துடன் உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் வழக்கத்தைத் தவிர்க்கவேண்டும் என்றார் அவர்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் சத்திஸ்கரில் பொது விநியோகத் திட்டம் ஓரளவுக்குச் சரியான முறையில் செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. உண்மை என்ன என்பதைச் சம்பந்தப்பட்ட பயனாளிகள்தான் ஊர்ஜிதம் செய்யவேண்டும். நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் (என்.எஸ்.எஸ்.ஒ) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கிராமப்புறங்களில் 98.9% மற்றும் நகர்புறத்தில் 99.6% குடும்பத்தினர் ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு கிடைக்கிறது என்கிறார்கள். சரியான முறையில் உணவு கிடைக்கவில்லை என்று கூறும் கிராம மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களுக்கு வருடத்தில் எல்லா மாதங்களிலும் உணவு கிடைக்கிறது. இந்நிலையில் யாருக்காக மத்திய அரசு இந்தப் புதிய உணவு பாதுகாப்புச் சட்ட மசோதாவை கொண்டு வருகிறது?

மேலும், 2009&10 காலகட்டத்தில் மட்டும் 40.4% அல்லது 17.1 டன் மில்லியன் உணவுப் பொருள்கள் வீணாகியுள்ளன. 20045ல் இந்தக் கணக்கு 54.1% அல்லது 16.2 டன் மில்லியன் என்று இருந்தது.

பாதுகாப்பு மசோதா பாதுகாப்பானதா?

இந்தப் பின்னணியில் உணவு பாதுகாப்பு மசோதாவின்மூலம் மக்களுக்கான உணவுப்பொருள்களை உறுதி செய்யும் உரிமையை தனிச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு. இந்த மசோதாவை காங்கிரஸ் 22 டிசம்பர் 2011 அன்று லோக் சபாவில் தாக்கல் செய்தது. நாடாளுமன்றம் அந்த மசோதாவை உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக நிலைக் குழுவுக்கு அனுப்பியது. இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை ஜனவரி 2013ல் சமர்ப்பித்தது.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு திட்டமிட்டது. ஆனால், ஊழல், முறைகேடு புகார்களைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இருப்பினும் புதிய தேசிய உணவு பாதுகாப்பு  மசோதாவை (2013) உணவுத் துறை மந்திரி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது. இந்த மசோதா நிறைவேறுமா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மக்களை வெகுவாகக் கவரும் திட்டங்களில் உணவு பாதுகாப்பு மசோதாவும் ஒன்றாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டலாமா அல்லது அவசர சட்டம் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தி பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறலாமா என்று அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிக்காது என்று நம்பலாம். காரணம் எதிர்க்கட்சிகளும் தனது ஓட்டு வங்கியைப் பெருக்கிக்கொள்வதிலேயே கவனமாக இருக்கின்றன. இருப்பினும் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்திய முதல் மாநிலம், சத்தீஸ்கர். மத்திய அரசு லோக்சபாவில் அறிவித்தபோதே சத்தீஸ்கர் உணவு பாதுகாப்பு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.  இந்தச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்: (1) எவர் ஒருவர் வருமான வரி அல்லது சொத்து வரி கட்டுகிறார்களோ அந்தக்  குடும்பங்களுக்கு இந்தச் சட்டத்தின்படி உணவுப் பொருள்கள் வழங்கப்படமாட்டாது. (2) எவர் ஒருவர் நான்கு ஏக்கர் கொண்ட பாசன வசதியுள்ள நிலம் வைத்துள்ளாரோ அல்லது எட்டு ஏக்கர் கொண்ட பாசன வசதி இல்லாமல் இருக்கும் நிலத்தை வைத்துள்ளாரோ அவர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் உணவு பொருள்கள் வழங்கப்படமாட்டாது. இந்த விதிவிலக்குகள்மூலம் சத்தீஸ்கரில் பத்து சதவிகித மக்களே உணவு பாதுகாப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், வறியவர்களுக்கு மட்டுமே உணவுப் பொருள்கள் அளிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

குழப்பங்கள்

ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்பு மசோதாவின் அம்சங்கள் தெளிவற்றவையாகவும் குழப்பம் அளிப்பவையாகவும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, உணவு தானியங்களுக்குப் பதில் பணம் அளிக்கும் திட்டம் நடைமுறையில் மிகவும் சிக்கலானது. பல்வேறு மாநில முதல்வர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம், இந்த மசோதாவை ஏற்றுக்கொண்டால் மாநில அரசுக்கு நிதிச்சுமை கூடிவிடும்.

உணவு பாதுகாப்பு மசோதாவில் உள்ள முக்கியச் சிக்கல்களை இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.

 • நாட்டின் 67% மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது கிராமப்புறத்தில் வசிக்கும் 75% குடும்பத்தினருக்கும் நகர்புறத்தில் வசிக்கும் 50% குடும்பத்தினருக்கும் இச்சட்டத்தின்மூலம் மலிவு விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்த வேறுபாடு அனுமதிக்கப்பட்டது?
 • பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பதில் தெளிவில்லை.
 • இந்தச் சட்ட மசோதாவை முழுமையாக அமல்படுத்தத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் உரிய நேரத்தில் செய்தால்தான் எல்லா அம்சங்களையும் நிறைவாக பூர்த்தி செய்ய முடியும். இதை மத்திய அரசால் மட்டுமே செயல்படுத்த முடியாது.
 • முற்றிலும் மையப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்தச் சட்ட மசோதா. மாநில அரசுகளுக்குப் போதுமான அளவில் தன்னாட்சிக்கு எந்தவிதத்திலும் வாய்ப்பில்லை.
 • போர்க் காலம், வெள்ளப் பெருக்கு, வறட்சி, புயல் பாதிப்பு, நிலநடுக்கம் போன்ற சூழ்நிலைகளில் மக்களுக்கு உணவு அளிப்பதற்கு இந்தச் சட்டத்தில் இடமில்லை.
 • உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு போதிய அளவில் கட்டமைப்பு வசதி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இல்லை.  ஏற்கெனவே ஒவ்வொரு ஆண்டும் சேமிப்புக் கிடங்குகளில் நூற்றுக்கணக்கான டன் உணவுப் பொருள்கள் அழுகி, வீணாகிப்போகின்றன.
 • முன்னதாக, கேரளா, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகம் (ஜூலை முதல்), மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்கள் மலிவு விலையில் உணவுப் பொருள்களைப் பெரும்பாலான மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தப் புதிய மசோதா சட்டமானால் அது எந்த வகையில் கூடுதல் பலனளிக்கப்போகிறது?

மொத்தத்தில் மேற்படி மசோதா மக்கள் நலனை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல, அரசியல் ஆதாயங்களுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

அரசு என்ன சொல்கிறது?

 • உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் 67%  ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
 • 80 கோடி மக்கள் பயனடைவார்கள்.
 • திட்டத்தைச் செயல்படுத்த 1.3 லட்சம் கோடி செலவாகும் என்பது தொடக்ககால மதிப்பீடு.
 • நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உணவு பாதுகாப்பு மசோதாவை அவசரச் சட்டம் மூலம் கொண்டுவரவேண்டும் அல்லது சிறப்பு நாடாளுமன்றக்கூட்டத்தின்மூலம் உணவு சட்டமாக்கவேண்டும்.

உணவு பாதுகாப்பு மசோதா : முக்கிய அம்சங்கள்

 • அனைவருக்கும் குறைந்த விலையில் சுகாதாரமான உணவு போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
 • கிராமப்புறங்களைச் சேர்ந்த 75% மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50% மக்கள்.
 • எப்படி விநியோகிக்கப்படும்? பொது விநியோக முறை மூலம் தானியங்கள் மக்களைச் சென்றடையும்.
 • 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப இலவச உணவு அளிக்கப்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கும் இலவச உணவு அளிக்கப்படும்.
 • திட்டத்தை மேற்பார்வையிட ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக உணவுப் பிரிவு ஏற்படுத்தப்படவேண்டும்.
 • மசோதாவில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன. ஷெட்யூல் 1: செலவுகள். ஷெட்யூல் 2 : ஊட்டச்சத்து அளவுமுறைகள். ஷெட்யூல் 3 : உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள்.
 • தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட நகல், 2013 முழுமையான வடிவம் : http://tinyurl.com/pv3puc2

 சில கணக்குகள்

 • தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு இண்டர்நேஷனல் ஃபுட் பாலிஸி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்  அமைப்பைச் சேர்ந்த பி.கே. ஜோஷி அளித்த பேட்டியில் இருந்து சில தகவல்கள்.
 • அரிசி ஒரு கிலோ 3 ரூபாய், கோதுமை 2 ரூபாய் என்று நிர்ணயிக்கப்படும். ஒவ்வொருவரும் எவ்வளவு தானியம் பெறவேண்டும் என்பதை மாநில அரசு முடிவு செய்யும்.
 • திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தோராய செலவு, ஜிடிபியில் இருந்து 1.1% வரை ஆகும். ஆனால் அரசால் இந்த அளவுக்கு நிதி ஒதுக்கமுடியுமா என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு, ஒரு கிலோ அரிசி வாங்க அரசு 18 ரூபாய் செலவிடவேண்டியிருக்கும்.
 • இந்தத் திட்டத்தின்படி ஆண்டுக்கு 62 மில்லியன் டன் தானிய உற்பத்தி செய்யமுடியும் என்பது அரசின் வாதம். மானியத்தின் மதிப்பு 24 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 • விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கொள்முதல் விலையும் அதிகரிக்கும். அப்போது மானியத்துக்கான செலவும் அதிகரிக்கும்.  தானியங்களின் விலை கூடவில்லை என்றாலும்  மக்கள் தொகை எண்ணிக்கை கூடுவே செய்யும். அந்த வகையில், நிதிச்சுமையும் கூடும். எனவே இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது சிரமமானது.
  << வெட்கப்பட வேண்டும்!மாற்றத்தின் கதை >> <br/>

இந்த இதழில் மேலும்.. <br/><br/>

 1. ஜியா கான் நிசப்தத்தின் பேராசை
 2. தப்பிச்செல்லும் அகதிகள்
 3. ஸ்ரீனிவாசன் - விளையாட்டு, ஊழல்,அரசியல்
 4. அரசு மக்கள் மாவோயிசம்
 5. அரங்கேறும் காட்சிகள்... அணிமாறும் கட்சிகள்
 6. அமெரிக்கா உங்களைக் கண்காணிக்கிறது!
 7. ஹீரோ வேல்யூவை நம்பி ஏமாற வேண்டாம்!
 8. மன்மோகன் சிங் என்ன செய்தார் ?
 9. திராவிடக் கட்சிகள் சாதிகளை வைத்து அரசியல் செய்கின்றன!
 10. அம்மா உணவகம் சாதனையா? வேதனையா?
 11. மாற்றமும் ஏமாற்றமும்
 12. நரேந்திர மோடி இந்தியாவைக் காப்பாரா பிரிப்பாரா?
 13. நாடெங்கும் வீசும் நரேந்திர மோடி அலை!
 14. விடுதலை அளிப்பதே கல்வி!
 15. வெட்கப்பட வேண்டும்!
 16. ஆன்லைன் பல்கலைக்கழகம்
 17. மாற்றத்தின் கதை
 18. உணவு பாதுகாப்பு மசோதா நோக்கம் நிறைவேறுமா?
 19. மீண்டும் நாராயணமூர்த்தி

Write a comment