மிரளவைக்கும் மின்வெட்டு!

Category : தமிழ்நாடு

உங்கள் ஊரில் எத்தனை மணி நேரம்? உறவினர்களிடம் மொபைலில் பேசும்போது இந்தக் கேள்வி கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறது.  உபயம், மின்வெட்டு. மின்வெட்டுப் பிரச்னையைத் திறம்பட சமாளிக்கவில்லை என்பதுதான்  கடந்த ஆட்சியின் மீது விழுந்த முக்கிய விமரிசனம்.  அதைச்சொல்லியே தேர்தலில் ஜெயித்தது அதிமுக கூட்டணி.

2012 ஆகஸ்டு மாதத்துக்குள் மின்வெட்டு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று பதவியேற்ற கையோடு அறிவித்தார்  முதல்வர் ஜெயலலிதா. ஆனால், திமுக  ஆட்சியில் நான்கு மணி நேரம் இருந்த மின்வெட்டு இப்போது எட்டு மணி நேரத்தை எட்டியது. இன்னும் சில பகுதிகளில் பத்து மணி நேரத்தைத் தாண்டியது.

எனவே சாலைக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டனர்  மக்கள். கடையடைப்பு, சாலை மறியல், ஊர்வலம், பேரணி,  உண்ணாவிரதம், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்று அனைத்து வழிகளிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். மின்வெட்டுப் பிரச்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை அடியோடு சீர்குலைக்கத் தொடங்கியதுதான்  மக்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்துள்ளது.

எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது போகும் என்பது சரியாகத் தெரியவில்லை. விளைவு, வீட்டுவேலைகளை  சரியான நேரத்துக்குச் செய்யமுடிவதில்லை.  குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீடுகளில் மின்விசிறி இல்லாமல்  ஒரு நிமிடத்தைக்கூட நிம்மதியாகக் கடத்திவிட முடியாது. மோட்டார், ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி  என்று அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும்
மின்சாரத்தில் இயங்கும் சூழ் நிலையில் மணிக்கணக்கில் மின்வெட்டு என்பதை பொதுமக்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

அடுத்தது, மாணவர்கள். தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்களின் படிக்கும் நேரம் முழுவதையும் மின்வெட்டு  கபளீகரம் செய்துவிடுகிறது. மின்சாரம் இருக்கிறது என்பதற்காக இரவில் கண்விழித்துப் படிக்கவேண்டிய நிலை. அதன்  பாதிப்பு மறுநாள் பள்ளி செல்லும்போது எதிரொலிக்கிறது. மின்வெட்டு படிப்பு நேரத்தை விழுங்கும்; மதிப் பெண்ணை விழுங்கும்; எதிர்காலத்தை விழுங்கும் என்பது பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கவலை.

தொழிற்சாலைகள் நடத்துபவர்களின் ஆவேசக்குரல்கள் அதிகமாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. ஒருநாளின் மூன்றில்  ஒரு பகுதி மின்சாரம் இல்லாமல் இருப்பதால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்புக்கு இது  வழிவகுக்கும் என்பது தொழிலாளர்களின் கவலை.  உற்பத்தியும் நடக்காமல், ஊழியர்களுக்குச் சம்பளமும் கொடுக்க வேண்டும் என்பது ஆபத்தான சூழல் என்பது தொழிலதிபர்களின் கருத்து. மொத்தத்தில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட  பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது மின்வெட்டுப் பிரச்னை.

விவசாயத்துறையும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் பாசனத்துக்குத் தேவையான நீரைப்  பெறமுடியவில்லை. விளைவு, கரும்பு, வாழை போன்றவை வீணாகின்றன.  இது டெல்டா விவசாயிகளை  வெகுவாகப் பாதித்துள்ளது.
இவை மட்டுமல்ல, பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் என்று அனைத்துத் துறையினரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது மின்வெட்டு. இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். சீரான மின்சாரத்தைக் கொடுக்க முடியாத அரசாங்கம், சீரான மின்வெட்டையாவது கொடுக்கவேண்டும் என்ற  விநோதமான கோரிக்கையை எழுப்பியிருக்கின்றனர் பொதுமக்கள். அது, சென்னை மின்வெட்டு விவகாரம். எங்கள்  பகுதிகளில் மட்டும் எட்டு மணி, ஒன்பது மணி, பத்து மணி மின்வெட்டு.

சென்னைக்கு மட்டும் ஒன்று, ஒன்றரை,  இரண்டு மணி மின்வெட்டா? இந்தப் பிரச்னையைச் சமாளிக்கும் விதமாகவே சென்னையின் மின்வெட்டு நேரத்தை  அதிகரித்து, பிற பகுதிகளில் மின்வெட்டு நேரத்தைக் குறைத்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. மின்சாரமே ஒழுங்காகக் கிடைக்காத நிலையில் மின்சாரக்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தக் கூட்டங்களில் எல்லாம் மின்வெட்டுப்
பிரச்னை பலத்த குழப் பங்களை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கருத்துமோதல்கள் ஏற்படத் தொட ங்கியுள்ளன.

மின்வெட்டின் சுமையை அனைவரும் சமமாகச் சுமக்கவேண்டும் என்னும் கோரிக்கையை கோவை மற்றும் தென்  மாவட்டங்களில் உள்ள முதலாளிகள் எழுப்பியிருக்கிறார்கள். ‘தமிழகத்தின் உயர்மின் அழுத்த மின்சாரப்  பயன்பாடு  3800 மெகாவாட் ஆக இருந்தபோதிலும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள தகவல்  தொழில்நுட்பப் பிரிவு, சிமெண்ட் தொழிற்சாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள், மாவு அரைக்கும் ஆலைகள்  மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்
அடிப்படையிலான  தொழிற்சாலைகளுக்கு உண்டான பயன்பாடு 1800 மெகாவாட்டாக உள்ளது.’ இது எப்படிச் சாத்தியமானது? ‘இவர்கள்  தங்களுடைய பலத்தை அரசாங்கத்திடம் காண்பித்து, இந்த மின்சார வெட்டி-லிருந்து விலக்கு பெற்றதன் காரணமாக  இவர்களுடைய சுமை தென் மற்றும் மேற்கு தமிழகத்திலுள்ள சிறு, குறு மற்றும் இதரத் தொழில்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.’

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் வசதி கொண்ட பெரும் முதலாளிகளுக்கு 1800 மெகாவாட் தடையில்லா  மின்சாரம் எதற்கு வழங்க-வேண்டும்? அனைவரையும் போல் அவர்களுக்கும் மின்வெட்டை அமல்படுத்த ஏன் அரசு தயங்குகிறது? 3600 மெகாவாட் மின்சாரத்தை தினமும் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் இந்த தொழிற்சாலை  முதலாளிகளிடம் இருக்கின்றன. ஆனால் அவற்றை இயக்கச் செய்யுமாறு அரசு வலியுறுத்தவில்லை.

தமிழகம் எதிர்கொள்ளும் மின்பற்றாக்-குறைக்கும் மத்திய அரசின் தனியார்-மயமாக்கல் கொள்கைக்கும் உள்ள  தொடர்பையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மாநில அரசின் மின் திட்டங்கள் 1992 தொடங்கி நிறுத்தப்- பட்டுவிட்டன. தனியார் நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு சென்று சேர்ந்துவிட்டது. 1994 வரை உபரி மின்சாரம் தயாரித்து வந்த தமிழகம் பற்றாக்குறை திண்டாட்டத்தில் விழுந்ததற்கு இந்த கொள்கைமாற்றம் ஒரு முக்கியக் காரணம்.

தமிழகத்துக்கு மின்சாரம்

(ஆண்டு ஒன்றுக்கு)

மின் தேவை    12500 மெகாவாட்

மின் உற்பத்தி    7500 மெகாவாட்

பற்றாக்குறை    5000 மெகாவாட்

மின் உற்பத்தி: எதிர்பார்ப்பு

வட சென்னை    1200 மெகாவாட்

மேட்டூர்    600 மெகாவாட்

டி.என்.ஈ.பி

என்.டி.பி.சி

கூட்டுமுயற்சி    1041 மெகாவாட்

டி.என்.ஈ.பி

என்.எல்.சி

கூட்டுமுயற்சி    387 மெகாவாட்

கல்பாக்கம்    167 மெகாவாட்

கூடங்குளம்    925 மெகாவாட்

என்ன நினைக்கிறார்கள்?

 உன்னி கிருஷ்ணன் – கோயம்புத்தூர்

ஓராண்டு முழுவதும் ஒரு நாளைக்கு 2 மணி நேர பவர் கட் அமலில் இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் 6 மணி நேர  பவர் கட் ஆரம்பமானது.

பிறகு, அதுவும் அதிகரித்து இப்போது 8 மணி நேர இருளில் வந்து முடிந்திருக்கிறது. சில  இடங்களில், ஒரு நாளைக்கு தொடர்ந்து 10 மணி நேரம் கூட கரெண்ட் இல்லாத நிலை!

சென்னையில் பல பகுதிகளில் குறைவான நேரம்தான் கரெண்ட் போகிறது என்பதை நண்பர்கள் மூலம் அறியும்போது,  வலியும் வேதனையும் அதிகரிக்கிறது. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று புரியவில்லை.

இங்கே தொழிற்சாலைகள் இல்லையா? இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதில்லையா? அலுவலகங்கள்  செயல்படவில்லையா? மின்சாரம் இல்லை என்பதுதான் பிரச்னை என்றால், அந்தச் சிரமத்தை எல்லோரும் சமமாக  ஏற்பதுதானே சரியாக இருக்கும்? முழுக்க முழுக்க எங்கள் தலையில் எல்லாக் கஷ்டங்களையும் கட்டிவிடு-வதை எப்படி  ஏற்கமுடியும்?

சரவணன் – ஓசூர்

ஹாஸ்பிடலுக்கு போனா கரெண்ட் இல்ல. பேங்குக்குப் போனா கரண்ட் இல்ல.

ஆபீஸ்ல ஏஸி ஓடறதில்ல. இன்வர்டர் எவ்ளோ நேரம்தான் தாங்கும்! இதனால வேலை கடுமையா பாதிக்கப்படுது.  ஸ்கூல் போற குழந்தைங்களால ஃபேன் இல்லாம எப்படி இருக்கமுடியும்? நாள் முழுக்க வியர்வை கொட்டிக்கிட்டே  இருந்தா, குழந்தைங்க உடம்பு என்ன ஆகறது?

இது போதாதுன்னு மின்கட்டணம் உயரப்போகுதுன்னு பேச்சு ஆரம்பிச்சிருக்கு. என்னைக் கேட்டா, யூனிட்டுக்குக்  கொஞ்சம் கூடுதலா வேணும்னாலும் பணம் கொடுத்துடலாம். எங்களுக்குத்  தேவை,  தடையில்லா மின்சாரம்.  அவ்வளவுதான்.

தமிழ் – கல்லூரி மாணவர், கோயம்புத்தூர்.

தேர்வுகளுக்குப் படிக்கமுடியாம திணற வேண்டியிருக்கு. நாளைக்கு மார்க் கம்மியா வாங்கினா இண்டர்வியூவுல இதைக்  காரணமா சொல்லமுடியுமா?

மக்கள் தொடர்ந்து போராடினாலும் எந்தவித பலனும் இல்லை. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ஊரான கோயம்புத்தூருக்கு ஏன் இந்த நிலைமை வரணும்? தமிழகம் முழுக்கச் சீரான மின்வெட்டு  கொண்டுவரலாமே!

ஸ்ரீவித்யா – திருப்பூர்

தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை கரண்ட் கட் செய்துவிடுகிறார்கள். இதனால் கடந்த இரு வாரங்களில் பல  சிறிய, நடுத்தர ஆலைகள் திருப்பூரிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளன.

குறிப்பாக, ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின்  போது இருந்த நிலைமையைக் காட்டிலும் இப்போது படு மோசமான நிலை. உற்பத்தி செய்யவும் முடியவில்லை.  உற்பத்தி செய்தவற்றை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கவும் முடியவில்லை. எவ்வளவோ  கஷ்டப்பட்டு முதலீடு செய்த பல நிறுவனங்கள் வியாபாரத்தையும் நடத்தமுடியாமல் கடனையும் அடைக்கமுடியாமல்  தவிக்கின்றன.

என்னைப் போல் வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் படும் அவதி விவரிப்புக்கு அப்பாற்பட்டது. இருட்டில் தட்டுத்- தடுமாறி, சமைத்து, குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் விழி பிதுங்கிவிடுகிறது. இரவில் தூங்கலாம் என்றால்  ஃபேன் இல்லை. இன்வர்டர் வாங்கலாம் என்றால் விலை கொஞ்சமா நஞ்சமா? மக்களின் கொந்தளிப்பை உணர்ந்து  அரசு உடனடியாக மின்வெட்டை வாபஸ் வாங்கவேண்டும்!

  << கூடங்குளமும் மின்வெட்டும்இணைய சுதந்தரம் பறிக்கப்படுமா? >> <br/>

இந்த இதழில் மேலும்.. <br/><br/>

 1. நார்வே குழந்தை கற்றுக்கொடுக்கும் பாடங்கள்
 2. ஒரு புத்தகத்தைத் தடை செய்வது எப்படி?
 3. கர்நாடகா: அசிங்கப்பட்ட அமைச்சர்கள்
 4. சார்லஸ் டிக்கன்ஸ் 200
 5. வி.கே. சிங்: இது, வயது பிரச்னை மட்டும்தானா?
 6. போர்க்கொடி தூக்கும் முதல்வர்!
 7. அம்புலி
 8. அழகி
 9. காலப்பெட்டகம்
 10. மேட் இன் சீனா
 11. விளையாட்டு
 12. இணைய சுதந்தரம் பறிக்கப்படுமா?
 13. மிரளவைக்கும் மின்வெட்டு!
 14. கூடங்குளமும் மின்வெட்டும்
 15. ஸ்டாலின் தலைவராகலாமா?
 16. ஆசிரியர் படுகொலை: மாதா, பிதா, குரு, கொலை - - ஒரு சமூக அதிர்ச்சி
 17. சினிமா கொலை செய்யத் தூண்டும்!
 18. டார்கெட் இரான்
 19. பக்கத்து வீடு
 20. ஐந்து மாநில தேர்தல்: ஹைலைட்ஸ்
 21. என்கவுண்டர் : ஏன், எதற்கு, எப்படி?

Write a comment